Showing posts with label சார்பெழுத்துகள். Show all posts
Showing posts with label சார்பெழுத்துகள். Show all posts

Monday, July 07, 2008

தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் : 2 : மொழி மரபு : 2 : அளபெடை

08: குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத்து இம்பர் ஒத்தகுற் றெழுத்தே

சொல்லின் ஓசை குறைந்த இடத்து அதன் ஈற்றில் நெட்டெழுத்திற்குப்பின் அதற்கு இனமான குற்றெழுத்து நின்று ஓசையை நிறைவு செய்யும். அது அளபெடை எனப்படும். (எ.கா) ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ

09 : ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு
இகரம் உகரம் இசைநிறை வாகும்

ஐ ஔ என்ற இரண்டு நெட்டெழுத்திற்கும் அதன் ஈற்றில் இகரமும் உகரமும் இனமாய் நின்று ஓசையை நிறைவு செய்யும். (எ.கா) ஐஇ ஔஉ

செய்யுளில் ஓசை குறைந்த இடத்து நெட்டெழுத்து ஏழும் தன் மாத்திரையில் இருந்து நீண்டொலிப்பது அளபெடை எனப்படும்.
அளவு + எடை - அளவு நீண்டொலித்தல்.

(எ.கா) உழாஅர் ( உழமாட்டார்)

செல்வி ஷங்கர் 07072008

Sunday, June 29, 2008

தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் : 2 : மொழி மரபு : 1 : சார்பெழுத்துகள் தொடர்ச்சி

04 : இடைப்படில் குறுகும் இடனுமார் உண்டே
கடப்பாடு அறிந்த புணரியல் ஆன

குற்றியலுகரம் தனி மொழியில் மட்டுமின்றி புணர் மொழியின் இடையே தோன்றினாலும் தன் அரை மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும்.
எ.கா : ஆடு, பாடு, ஆடுகளம், பாடுபொருள்

05 : குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே

ஆய்த எழுத்து உயிர்க்குறில் முன்னும் வல்லின உயிர்மெய்க் குறில் பின்னும் வர இடையே பயின்று வரும்.
எ; கா : எஃகு, கஃசு, அஃது, இஃது

06 : ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும்

நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும் போதும் அரை மாத்திரையே ஒலிக்கும்.
எ, கா : அஃறிணை, முஃடீது ( அல் + திணை, முள் + தீது)

07 : உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான

உருவின் கண்ணும் ஒலியின் கண்ணும் சிறுபான்மை ஆய்தம் தோன்றும். பொருளுடைய சொல்லும் அவை அல்லாத மொழிகளும் மெய்யெழுத்துகள் போல் அரை மாத்திரையும், சிறுபான்மை மிகுந்தும் ஒலிக்கும். இவை ஆய்தம் சுருங்கா எழுத்துச் சொற்களாகும்.
எ. கா : கஃறு, சுஃறு ( உரு, ஒலி )

இவை போன்ற சொற்கள் நடைமுறையில் பயன் படுத்துவது இல்லை. ஆகையினால் இவை புதுமையாக இருக்கும். இயன்ற வரை நடைமுறைச் சொற்கள் எடுத்துக்காட்டாகத் தர முயல்கிறேன்.

தொடரும் ...... செல்வி ஷங்கர் 29062008








Thursday, June 26, 2008

தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்: 2 : மொழி மரபு: 1: சார்பெழுத்துகள்

01 : குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே

ஒரு மொழிக் குற்றியலிகரம் மியா என்னும் அசைச்சொல்லில் யாகாரத்திற்கு முன் மகர மெய்யின் மீது ஊர்ந்து வரும்.

(எ.கா) : கேண்மியா, சென்மியா ( கேளுங்கள், செல்லுங்கள் என்பது பொருள்)

02 : புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக்கூறின் முன்னர்த் தோன்றும்.

சொற்புணர்ச்சியின் இடையே குற்றியலுகரம் யகரத்தின் முன்னே இகரமாய்த் திரிந்து குறுகி ஒலித்தலுமுண்டு.

(எ.கா ) : நாடியாது, குரங்கியாது ( நாடு + யாது -
ட் + உ = டு
ட் + இ = டி
நாடியாது)

03 : நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே

குற்றியலுகரம் வல்லின மெய்கள் ஆறின் மீதும் ஊர்ந்து நெட்டெழுத்தின் பின்னும் ஐவகைத் தொடர்மொழியின்
ஈற்றிலும் நிற்றல் வேண்டும்.

(எ.கா) :
நாடு : நெடில் தொடர்
அழகு : உயிர்த் தொடர்
பாட்டு : வன்தொடர்
பஞ்சு : மென்தொடர்
மார்பு : இடைத் தொடர்
எஃகு : ஆய்தத் தொடர்

தொடரும் ...... செல்வி ஷங்கர் - 26082008