Monday, July 07, 2008

தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் : 2 : மொழி மரபு : 3 : எழுத்துகள் மொழியாதல்

10 : நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி

உயிர் நெடில் ஏழும் ஓரெழுத்து ஒருமொழியாய் வரும்.
(எ.கா)
ஆ : பசு
ஈ : கொடு
ஊ : உணவு
ஏ : கூர்மை
ஐ : தலைவன்
ஓ : ஓசை
கௌ : கவ்வுதல்

11 : குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே

உயிர்க்குறில் ஐந்தும் ஒரு மொழியாகும் இயல்புடையன அல்ல

12 : ஓரெழுத்து ஒருமொழி ஈரெழுத்து ஒருமொழி
இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே

மொழி மூவகைப்படும். ஓரெழுத்து ஒருமொழி (ஆ), ஈரெழுத்து ஒருமொழி ( மணி), இரண்டிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வரும் மொழி (ஆண்டு, ஆடவர் )

செல்வி ஷங்கர் 07072008


தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் : 2 : மொழி மரபு : 2 : அளபெடை

08: குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத்து இம்பர் ஒத்தகுற் றெழுத்தே

சொல்லின் ஓசை குறைந்த இடத்து அதன் ஈற்றில் நெட்டெழுத்திற்குப்பின் அதற்கு இனமான குற்றெழுத்து நின்று ஓசையை நிறைவு செய்யும். அது அளபெடை எனப்படும். (எ.கா) ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ

09 : ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு
இகரம் உகரம் இசைநிறை வாகும்

ஐ ஔ என்ற இரண்டு நெட்டெழுத்திற்கும் அதன் ஈற்றில் இகரமும் உகரமும் இனமாய் நின்று ஓசையை நிறைவு செய்யும். (எ.கா) ஐஇ ஔஉ

செய்யுளில் ஓசை குறைந்த இடத்து நெட்டெழுத்து ஏழும் தன் மாத்திரையில் இருந்து நீண்டொலிப்பது அளபெடை எனப்படும்.
அளவு + எடை - அளவு நீண்டொலித்தல்.

(எ.கா) உழாஅர் ( உழமாட்டார்)

செல்வி ஷங்கர் 07072008