Monday, July 07, 2008

தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் : 2 : மொழி மரபு : 3 : எழுத்துகள் மொழியாதல்

10 : நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி

உயிர் நெடில் ஏழும் ஓரெழுத்து ஒருமொழியாய் வரும்.
(எ.கா)
ஆ : பசு
ஈ : கொடு
ஊ : உணவு
ஏ : கூர்மை
ஐ : தலைவன்
ஓ : ஓசை
கௌ : கவ்வுதல்

11 : குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே

உயிர்க்குறில் ஐந்தும் ஒரு மொழியாகும் இயல்புடையன அல்ல

12 : ஓரெழுத்து ஒருமொழி ஈரெழுத்து ஒருமொழி
இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே

மொழி மூவகைப்படும். ஓரெழுத்து ஒருமொழி (ஆ), ஈரெழுத்து ஒருமொழி ( மணி), இரண்டிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வரும் மொழி (ஆண்டு, ஆடவர் )

செல்வி ஷங்கர் 07072008


தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் : 2 : மொழி மரபு : 2 : அளபெடை

08: குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத்து இம்பர் ஒத்தகுற் றெழுத்தே

சொல்லின் ஓசை குறைந்த இடத்து அதன் ஈற்றில் நெட்டெழுத்திற்குப்பின் அதற்கு இனமான குற்றெழுத்து நின்று ஓசையை நிறைவு செய்யும். அது அளபெடை எனப்படும். (எ.கா) ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ

09 : ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு
இகரம் உகரம் இசைநிறை வாகும்

ஐ ஔ என்ற இரண்டு நெட்டெழுத்திற்கும் அதன் ஈற்றில் இகரமும் உகரமும் இனமாய் நின்று ஓசையை நிறைவு செய்யும். (எ.கா) ஐஇ ஔஉ

செய்யுளில் ஓசை குறைந்த இடத்து நெட்டெழுத்து ஏழும் தன் மாத்திரையில் இருந்து நீண்டொலிப்பது அளபெடை எனப்படும்.
அளவு + எடை - அளவு நீண்டொலித்தல்.

(எ.கா) உழாஅர் ( உழமாட்டார்)

செல்வி ஷங்கர் 07072008

Sunday, June 29, 2008

தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் : 2 : மொழி மரபு : 1 : சார்பெழுத்துகள் தொடர்ச்சி

04 : இடைப்படில் குறுகும் இடனுமார் உண்டே
கடப்பாடு அறிந்த புணரியல் ஆன

குற்றியலுகரம் தனி மொழியில் மட்டுமின்றி புணர் மொழியின் இடையே தோன்றினாலும் தன் அரை மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும்.
எ.கா : ஆடு, பாடு, ஆடுகளம், பாடுபொருள்

05 : குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே

ஆய்த எழுத்து உயிர்க்குறில் முன்னும் வல்லின உயிர்மெய்க் குறில் பின்னும் வர இடையே பயின்று வரும்.
எ; கா : எஃகு, கஃசு, அஃது, இஃது

06 : ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும்

நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும் போதும் அரை மாத்திரையே ஒலிக்கும்.
எ, கா : அஃறிணை, முஃடீது ( அல் + திணை, முள் + தீது)

07 : உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான

உருவின் கண்ணும் ஒலியின் கண்ணும் சிறுபான்மை ஆய்தம் தோன்றும். பொருளுடைய சொல்லும் அவை அல்லாத மொழிகளும் மெய்யெழுத்துகள் போல் அரை மாத்திரையும், சிறுபான்மை மிகுந்தும் ஒலிக்கும். இவை ஆய்தம் சுருங்கா எழுத்துச் சொற்களாகும்.
எ. கா : கஃறு, சுஃறு ( உரு, ஒலி )

இவை போன்ற சொற்கள் நடைமுறையில் பயன் படுத்துவது இல்லை. ஆகையினால் இவை புதுமையாக இருக்கும். இயன்ற வரை நடைமுறைச் சொற்கள் எடுத்துக்காட்டாகத் தர முயல்கிறேன்.

தொடரும் ...... செல்வி ஷங்கர் 29062008








Thursday, June 26, 2008

தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்: 2 : மொழி மரபு: 1: சார்பெழுத்துகள்

01 : குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே

ஒரு மொழிக் குற்றியலிகரம் மியா என்னும் அசைச்சொல்லில் யாகாரத்திற்கு முன் மகர மெய்யின் மீது ஊர்ந்து வரும்.

(எ.கா) : கேண்மியா, சென்மியா ( கேளுங்கள், செல்லுங்கள் என்பது பொருள்)

02 : புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக்கூறின் முன்னர்த் தோன்றும்.

சொற்புணர்ச்சியின் இடையே குற்றியலுகரம் யகரத்தின் முன்னே இகரமாய்த் திரிந்து குறுகி ஒலித்தலுமுண்டு.

(எ.கா ) : நாடியாது, குரங்கியாது ( நாடு + யாது -
ட் + உ = டு
ட் + இ = டி
நாடியாது)

03 : நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே

குற்றியலுகரம் வல்லின மெய்கள் ஆறின் மீதும் ஊர்ந்து நெட்டெழுத்தின் பின்னும் ஐவகைத் தொடர்மொழியின்
ஈற்றிலும் நிற்றல் வேண்டும்.

(எ.கா) :
நாடு : நெடில் தொடர்
அழகு : உயிர்த் தொடர்
பாட்டு : வன்தொடர்
பஞ்சு : மென்தொடர்
மார்பு : இடைத் தொடர்
எஃகு : ஆய்தத் தொடர்

தொடரும் ...... செல்வி ஷங்கர் - 26082008

Monday, June 23, 2008

தொல்காப்பியம் 06 -- எழுத்ததிகாரம் - பிற மரபுகள்


31 அ இ உ அம் மூன்றும் சுட்டு.


அ இ உ -என்ற இம்மூன்றும் பெயரைச் சார்ந்து வரும் சுட்டெழுத்துகளாகும். .
உ என்பது தற்போது வழக்கிலில்லை.

எ.கா : அது இது உது

அச்சிறுவன், இப்பெண், அவ்விடம், இவ்விடம், அப்பொருள், இப்பொருள்,
அக்காலம், இக்காலம், அவ்விலை, இவ்விதழ், அச்சிறப்பு, இப்புகழ்


32 ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.
ஆ, ஏ, ஓ என்ற மூன்றெழுத்துகளும் வினா எழுத்துகளாக வரும்.

எ.கா : அவனா?, ஏன்?, ஏது?,அவளோ ?

ஆ ஏ ஓ என்று வினவுப் பொருளில் பயன்படும் என்றால், அவை சொற்களின் இறுதி ஒலியாக ஒலிக்கும் என்பது சூத்திரத்தால் சுட்டப்படும் விதி.
அவனா, அவனோ என்பன போலவே,
அப்படியும் ஆனதே?
போனதும் உண்டே?
என்றெல்லாமும் வினா வகைகள் வழக்கில் இருந்தன. அப்படி வினா எழுப்பும் வழக்கம் இப்போது அருகிவிட்டது என்றாலும்,
'ஏண்டா இப்படி மொறைக்கற? இப்ப என்ன சொல்லிட்டேன்? எதுக்கு இவ்ளோ கோவம்?'
'பின்னே? நான் இவ்ள நேரம் இங்க காத்திட்டிருக்கேன்... என்னப் பாக்கவே பாக்காம பராக்குப் பாத்துட்டிருந்தா?'
இந்த உரையாடலில், 'பின்னே?' என்ற இடத்தில் ஏகாரம் வினாவாக எழுகிறது அல்லவா, அதுபோன்ற இடங்களில் சிலசமயங்களில் தற்போதும் ஏகாரம் வினாவாகப் பயன்படுவது உண்டு.
ஏன் ஏது என்ற எடுத்துக்காட்டுகள் இங்கே பொருந்தா. மொழியீற்று ஒலிகள் அவை. (அதாவது ஒரு வார்த்தைக்குக் கடைசியில் ஒலிக்கும் ஒலி.) ஏன், ஏது என்பன வார்த்தையின் தொடக்கத்தில் ஒலிக்கும் ஒலிகள்.




33 அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.


எழுத்துகள் தமக்கு விதிக்கப்பட்ட மாத்திரை அளவு கடந்து
ஒலித்தலும்,ஒற்றெழுத்துகள் தம் மாத்திரையிலிருந்து நீண்டொலித்தலும்
உண்டு.

விளித்தல் பொருளிலும் இசைப்பாடலிலும் இவ்வாறு ஒலிக்கும் என்று புலவர்
கூறுவர்.

எ.கா :கெடுப்பதூஉம், எடுப்பதூஉம், கலங்ங்கு, இலங்ங்கு, உழாஅர்.

பாடல்களில் எழுத்துகள் நீண்டு ஒலிப்பதுமுண்டு.

இத்துடன் எழுத்ததிகாரம் - நூன்மரபு முற்றுப் பெறுகிறது.

அடுத்து - மொழி மரபு.


பி.கு : விளக்கத்துடன் உதாரணமும் தந்து உதவும் ஹரியண்ணா மற்றும் செல்வி ஷங்கர் இருவருக்கும் நன்றிகள் பல :

Sunday, June 22, 2008

தமிழ் - கேள்விகள் ஆயிரம்?

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்று கருதப்படும் "தொல்காப்பியம்'தான் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல்களிலேயே முதல் நூல் என்று சொல்ல வேண்டும். "தொல் காப்பியத்திற்குப் பொருளுரை வழங்கியோர் பலர்.

அவற்றுள், சமீபத்தில் வெளியாகி நம்மைப் பாராட்ட வைக்கும் உரைகள் இரண்டு. முதலாவது, பாரதிதாசன் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கி. இராசாவின் பொருளுரையுடன் வெளி வந்திருப்பது. மூன்று பகுதிகளாக, மிகவும் எளிமையாக, வனப்பான புத்தக அமைப்புடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பதிப்பு, பார்த்ததும் படிக்கவும், படித்ததும் தேர்ந்து தெளியவும் வழிகோலும் வகையில் மைந்திருப்பதுதான் அதன் சிறப்பு.

இன்னொரு பதிப்பு தமிழண்ணலுடையது. மீனாட்சி புத்தக நிலையத்தாரின் கையடக்கப் பதிப்பு. தமிழண்ணலின் உரை விளக்கம் எனும் போது அதைப் பற்றி கருத்துக் கூற வும், அதை எடை போடவும் அடியேனுக்கு அருகதை இல்லை. தமிழ் கூறு நல்லுலகத்தின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தமிழறிஞர் தமிழண்ணல். மூலத்துக்கு மெருகேற்றும் அவரது உரை விளக்கம்.

***********************************************************

ஒரு புறம் செம்மொழி மையம் காண்கிறோம்; தமிழாராய்ச்சி, தமிழ்ப் பல்கலைக் கழகம் என்றெல்லாம் உருவாக்கித் தமிழ் பரப்புவதாகச் சொல்கிறோம்.

"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்கிற கோஷம் ஆங்காங்கே விளம்பரப் பலகைகளாகக் கண்ணில் தட்டுப்படுகிறன. தமிழ் பாட மொழியாகிறது, கட்டாயமாகத் தமிழ் படித்தே தீர வேண்டும் என்றெல்லாம் அரசு தரப்பு அறிவிப்புகள் வருகின்றன.

இந்தச் செய்திகள், ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், யதார்த்த உண்மை சுடுகிறது. தமிழ்கூறு நல்லுலகத்தில் தமிழுக்கு உண்மையிலேயே வரவேற்பு இருக்கிறதா?

நம்மவர்கள் நிஜமாகவே தமிழுணர்வுடன் தான் அன்றாட வாழ்க்கையில் இருக்கிறார்களா?

மனசாட்சியைத் தொட்டு இந்தக் கேள்விக்கு "ஆமாம்' என்று யாராவது பதிலளித்துவிட முடியுமா?

எங்கே தமிழ்?

எதிலே தமிழ்?

வீட்டில் அம்மா அப்பாவைக் கூட தமிழில் அழைப்பதில்லை நம்மில் பலர். அது போகட்டும். தமிழுணர்வு உடைய நம்மில் ஒருவர் வசதி வாய்ப்பு இருந்தும் தத்தம் குழந்தைகளைத் தமிழ்க் கல்விபெற அனுப்புகிறார்களா?

தமிழ்வழிக் கல்வி, தமிழ் பாடமொழி, தமிழுணர்வு இவையெல்லாம் ஊருக்கு உபதேசமாகத் தொடர்கிறதே தவிர, அழுத்தமான உணர்வாக, கொள்கைப் பிடிப்பாக இருக்கிறதா என்றால் இல்லை.

இப்போது தமிழ்வழிக் கல்வி என்றாலே வேலையில்லை என்கிற நிலைமை. தமிழை சிறப்புப் பாடமாக எடுத்து பட்டம் மற்றும், முதுகலைப் பட்டம் பெற்றால் ஆசிரியராக மட்டும்தான் வேலை கிடைக்கும் என்கிற நிலைமை. தமிழ்க் கல்லூரிகளில் சேர்வதற்கு யாரும் தயாராக இல்லை. அதைப் பற்றி ஆட்சியாளர்கள் ஏன் சிந்திப்பதில்லை?

இந்திப் பிரசார சபை போல, தமிழ் பிரசார இயக்கம் தொடங்கினால் என்ன?

ஆங்கிலக் கல்வி பெறும் தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாகத் தமிழ் கற்றுக் கொடுக்க ஏன் முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை?

தமிழில் படித்தால்தான் அரசு வேலை என்கிற உத்திரவாதம் ஏன் அளிக்கப்படுவதில்லை?

தமிழனுக்குத் தமிழுணர்வு ஊட்ட வேண்டிய அவலமும், தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டிய துர்பாக்கியமும் ஏற்பட்டிருக்கிறதே, அதை நினைத்தால் வெட்கித் தலைகுனிய நேர்கிறது. சிந்தித்து செயல்பட வேண்டியவர்கள் சிந்திப்பார்களா....?


நன்றி - தினமணி

Wednesday, June 18, 2008

தொல்காப்பியம் 05 -- எழுத்ததிகாரம் - மயக்கம்



தொல்காப்பியம் -- எழுத்ததிகாரம் - மயக்கம்.

---------------------------------------------------------
22 : அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்
மெய்ம்மயக்கு உடனிலை தெரியுங் காலை.
அந்த மூவாறு பதினெட்டு மெய்யெழுத்துகளும் தாம் மொழியில் வருமிடத்து, தனி மெய்யெழுத்து, தன் முன்னர் நின்ற பிற மெய்யோடும், தம் மெய்யோடும் மயங்கும். உயிர்மெய் உயிர்மெய்யோடும் மயங்கும். இவ்வாறு மெய்ம்மயக்கம் இரு வகைப்படும்.

தனி மெய் பிற மெய்யுடன் மயங்கும் முறை.

23 : ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்க்
க ச ப என்னும் மூவெழுத்து உரிய.
ட ற ல ள என்று சொல்லப்படும் நான்கு மெய்ய்யெழுத்துகளின் முன்
க ச ப என்னும் மூன்று எழுத்துகளும் வந்து மயங்கும்.
எ.கா :
கட்க, கற்க, கற்ப, செல்க, செல்ப, கொள்ப

24 : அவற்றுள்
ல ள ஃகான் முன்னர் ய வ வும் தோன்றும்
லகர ளகர மெய்யெழுத்துகளின் முன்னர் யகர வகரங்கள் வந்து மயங்கும்.
எ.கா :
செல்வம், கள்வன், வெள்யாறு, கொல்யானை


25 : ங ஞ ண ந ம ன எனும் புள்ளிமுன்னர்
தத்தம் இசைகள் ஒத்தன நிலையே.
ங ஞ ண ந ம ன என்ற மெய்யெழுத்துகளின் முன் க ச ட த ப ற என்னும் இன மெய்யெழுத்துகள் மயங்கி நிற்றலுமுண்டு.
எ.கா :
கங்கன், கஞ்சன், கண்டன், கந்தன், கம்பன், மன்றம்

26 : அவற்றுள்
ண ன ஃகான் முன்னர்
க ச த ப ம ய வ ஏழும் உரிய.
ணகர னகரங்களின் முன் ட ற என்னும் எழுத்துகளே அல்லாமல்
க ச த ப ம ய வ என்னும் ஏழு எழுத்துகளும் வந்து மயங்கும்.
எ.கா :
புன்செய், அன்பு, வன்மை, பண்பு, வெண்மை

27 : ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய் பெற்று அன்றே.
ஞ ந ம வ என்னும் மெய்யெழுத்துகளின் முன்னால் யகரம் மயங்கி நிற்றலும் இயைந்து நிற்றலும் உண்டு.

28 : மஃகான் புள்ளிமுன் வவ்வும் தோன்றும்.
மகர மெய்யின் முன்னால் வகர மெய்யும் தோன்றும்.

29 : ய ர ழ என்னும் புள்ளி முன்னர்
முதலாகு எழுத்து ஙகரமொடு தோன்றும்.
ய ர ழ என்னும் மெய்யெழுத்துகளின் முன் மொழிக்கு முதலாகும் ஒன்பது மெய்யெழுத்துகளும் ஙகரத்தோடு தோன்றி மயங்கும்.

தனி மெய் தன் மெய்யோடு மயங்குமாறு .

30 : மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம்முன் தாம் வரும் ர ழ அலங்கடையே.
எல்லா மெய்யெழுத்துகளும் ர ழ அல்லாத இடத்து தம் முன் தாம் வந்து மயங்கும்.
எ.கா :
அம்மை, காக்கை, பச்சை, மஞ்ஞை, மண்ணை, கன்னி, தத்தை
-------------------------------------------------------------------------------------------------
பதிவர் குறிப்பு :
பொதுவாக இலக்கண நூற்பாக்களைப் படிக்கும் போது நடைமுறைச் சான்றுகள் காட்டப் பெறின் எளிதாக உணர்வோம். ஆனால், இது இலக்கணம் என்று தெரியாமலேயே நாம் வழங்கி வரும் மொழி நடையில் அவை அமைந்து விடுகின்றன. அதனால் இலக்கணத்திற்குக் காட்டப் பட்ட எடுத்துக் காட்டுகள் நமக்குப் புதுமையாய்த் தோன்றும். அவை பழக்கத்தில் வரும் போது இயல்பாய் விடும்.

செல்வி ஷங்கர்: 18..06.2008

30 :


Thursday, July 20, 2006

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - 4

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - 4

மகரக் குறுக்கம் :

13 :

அரையளவு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியுங் காலை

வேறோர் எழுத்தினது ஓசையினால் மகர ஒற்று தன் அரைமாத்திரையில் இருந்து குறைந்து கால்மாத்திரையாக மாறிவிடும்.
உதாரணத்துக்கு "போன்ம், வரும் வண்ணக்கண்" இது பெரும்பன்மையான வழக்கிலில்லை..

எழுத்துகளின் வரிவடிவம்:

14 :
உட்பெறு புள்ளி உருவா கும்மே

"ம"கரம் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றியது.

அதாவது ப என்ற எழுத்தின் உள் புள்ளி வைத்தால் அது " ம " என்ற எழுத்தாக பழங்காலத்தில் கருதப்பட்டு வந்தது. தற்போதைய வழக்கில் இல்லை.


15 :
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலைய

மெய் எழுத்துகள் புள்ளியோடு இருக்கும்.

16 :
எகர ஒகரத்து இயற்கையும் அன்றே.


எ மற்றும் ஓ மெய்போலவே புள்ளி பெற்று வரும் என்பதாம். இப்போது வழக்கில் இல்லை.

17:
புள்ளியில்லா எல்லா மெய்யும்
உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும்
ஏனையு உயிரோடு உருவுதிருன் துயிர்த்தலும்
ஆயீ ரியல உயிர்த்தவாரே


மெய்யெழுத்துகள் "அ" வுடன் சேர்ந்தபோது புள்ளி நீங்கி அகரத்தோடு சேர்ந்து
ஒலிக்கும். மற்ற உயிரெழுத்துடன் சேரும் போது அதன் வடிவம் மாறி அந்த
உயிரெழுத்துடன் சேர்ந்து ஒலித்தலும் என இருவகையில் வரும்.

எ.கா :
க ங கா கீ கூ

18 :
மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே

உயிர் மெய் எழுத்துகளில் ஓசை / ஒலியானது மெய்யெழுத்தின் ஓசை / ஒலி
முதலில் தோன்றி அதற்கு பிறகு

வல்லினம் / மெல்லினம் / இடையினம்

19 :
வல்லெழுத் தென்ப கசட தபற

20 :
மெல்லெழுத் தென்ப ஙஞணநமன

21 :
இடையெழுத் தென்ப யரல வழள

பழைய பாடம் தான் :)

கசடதபற வல்லினம்
ஙஞணநமன மெல்லினம்
யரலவழள இடையினம்
"யாருமிங்கே ஓரினம்"

அன்புடன்
ஐயப்பன்