Sunday, June 22, 2008

தமிழ் - கேள்விகள் ஆயிரம்?

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்று கருதப்படும் "தொல்காப்பியம்'தான் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல்களிலேயே முதல் நூல் என்று சொல்ல வேண்டும். "தொல் காப்பியத்திற்குப் பொருளுரை வழங்கியோர் பலர்.

அவற்றுள், சமீபத்தில் வெளியாகி நம்மைப் பாராட்ட வைக்கும் உரைகள் இரண்டு. முதலாவது, பாரதிதாசன் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கி. இராசாவின் பொருளுரையுடன் வெளி வந்திருப்பது. மூன்று பகுதிகளாக, மிகவும் எளிமையாக, வனப்பான புத்தக அமைப்புடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பதிப்பு, பார்த்ததும் படிக்கவும், படித்ததும் தேர்ந்து தெளியவும் வழிகோலும் வகையில் மைந்திருப்பதுதான் அதன் சிறப்பு.

இன்னொரு பதிப்பு தமிழண்ணலுடையது. மீனாட்சி புத்தக நிலையத்தாரின் கையடக்கப் பதிப்பு. தமிழண்ணலின் உரை விளக்கம் எனும் போது அதைப் பற்றி கருத்துக் கூற வும், அதை எடை போடவும் அடியேனுக்கு அருகதை இல்லை. தமிழ் கூறு நல்லுலகத்தின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தமிழறிஞர் தமிழண்ணல். மூலத்துக்கு மெருகேற்றும் அவரது உரை விளக்கம்.

***********************************************************

ஒரு புறம் செம்மொழி மையம் காண்கிறோம்; தமிழாராய்ச்சி, தமிழ்ப் பல்கலைக் கழகம் என்றெல்லாம் உருவாக்கித் தமிழ் பரப்புவதாகச் சொல்கிறோம்.

"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்கிற கோஷம் ஆங்காங்கே விளம்பரப் பலகைகளாகக் கண்ணில் தட்டுப்படுகிறன. தமிழ் பாட மொழியாகிறது, கட்டாயமாகத் தமிழ் படித்தே தீர வேண்டும் என்றெல்லாம் அரசு தரப்பு அறிவிப்புகள் வருகின்றன.

இந்தச் செய்திகள், ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், யதார்த்த உண்மை சுடுகிறது. தமிழ்கூறு நல்லுலகத்தில் தமிழுக்கு உண்மையிலேயே வரவேற்பு இருக்கிறதா?

நம்மவர்கள் நிஜமாகவே தமிழுணர்வுடன் தான் அன்றாட வாழ்க்கையில் இருக்கிறார்களா?

மனசாட்சியைத் தொட்டு இந்தக் கேள்விக்கு "ஆமாம்' என்று யாராவது பதிலளித்துவிட முடியுமா?

எங்கே தமிழ்?

எதிலே தமிழ்?

வீட்டில் அம்மா அப்பாவைக் கூட தமிழில் அழைப்பதில்லை நம்மில் பலர். அது போகட்டும். தமிழுணர்வு உடைய நம்மில் ஒருவர் வசதி வாய்ப்பு இருந்தும் தத்தம் குழந்தைகளைத் தமிழ்க் கல்விபெற அனுப்புகிறார்களா?

தமிழ்வழிக் கல்வி, தமிழ் பாடமொழி, தமிழுணர்வு இவையெல்லாம் ஊருக்கு உபதேசமாகத் தொடர்கிறதே தவிர, அழுத்தமான உணர்வாக, கொள்கைப் பிடிப்பாக இருக்கிறதா என்றால் இல்லை.

இப்போது தமிழ்வழிக் கல்வி என்றாலே வேலையில்லை என்கிற நிலைமை. தமிழை சிறப்புப் பாடமாக எடுத்து பட்டம் மற்றும், முதுகலைப் பட்டம் பெற்றால் ஆசிரியராக மட்டும்தான் வேலை கிடைக்கும் என்கிற நிலைமை. தமிழ்க் கல்லூரிகளில் சேர்வதற்கு யாரும் தயாராக இல்லை. அதைப் பற்றி ஆட்சியாளர்கள் ஏன் சிந்திப்பதில்லை?

இந்திப் பிரசார சபை போல, தமிழ் பிரசார இயக்கம் தொடங்கினால் என்ன?

ஆங்கிலக் கல்வி பெறும் தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாகத் தமிழ் கற்றுக் கொடுக்க ஏன் முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை?

தமிழில் படித்தால்தான் அரசு வேலை என்கிற உத்திரவாதம் ஏன் அளிக்கப்படுவதில்லை?

தமிழனுக்குத் தமிழுணர்வு ஊட்ட வேண்டிய அவலமும், தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டிய துர்பாக்கியமும் ஏற்பட்டிருக்கிறதே, அதை நினைத்தால் வெட்கித் தலைகுனிய நேர்கிறது. சிந்தித்து செயல்பட வேண்டியவர்கள் சிந்திப்பார்களா....?


நன்றி - தினமணி

13 comments:

said...

வெறுமே தமிழ் தமிழ் என்று பொதுவில் புலம்பி விட்டு கூட்டம் கலைந்ததும் அதைப் பற்றி சிந்திக்காதக் கூட்டம் இதை நினைத்துப் பார்க்காது என்பது என்பது தான் வேதனையான உண்மை :(

said...

வெறுமே தமிழ் தமிழ் என்று பொதுவில் புலம்பி விட்டு கூட்டம் கலைந்ததும் அதைப் பற்றி சிந்திக்காதக் கூட்டம் இதை நினைத்துப் பார்க்காது என்பது என்பது தான் வேதனையான உண்மை :(

:((

said...

//வீட்டில் அம்மா அப்பாவைக் கூட தமிழில் அழைப்பதில்லை நம்மில் பலர்..//

வீட்டிலே தமிழ் பேச ஆரம்பிக்கலாம் ஐயா. அதுதான் உடனடியாக சுலபமாக செய்யக்கூடியது.

said...

//மனசாட்சியைத் தொட்டு இந்தக் கேள்விக்கு "ஆமாம்' என்று யாராவது பதிலளித்துவிட முடியுமா?//

இதுக்கு நீங்க மனசாட்சி அளவுக்கெல்லாம் போக வேண்டாம்.

//வீட்டில் அம்மா அப்பாவைக் கூட தமிழில் அழைப்பதில்லை நம்மில் பலர்.//

இது தாங்க என்னால தாங்க முடியலை.. அம்மான்னு கூப்பிடுறதுல இருக்கிற ஒரு அன்பு பாசம் மம்மி ல இருக்கிற மாதிரி எனக்கு தெரியல

//தமிழ்வழிக் கல்வி, தமிழ் பாடமொழி, தமிழுணர்வு இவையெல்லாம் ஊருக்கு உபதேசமாகத் தொடர்கிறதே தவிர, அழுத்தமான உணர்வாக, கொள்கைப் பிடிப்பாக இருக்கிறதா என்றால் இல்லை.//

100% உண்மை

//தமிழனுக்குத் தமிழுணர்வு ஊட்ட வேண்டிய அவலமும், தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டிய துர்பாக்கியமும் ஏற்பட்டிருக்கிறதே, அதை நினைத்தால் வெட்கித் தலைகுனிய நேர்கிறது//

காலக்கொடுமை தான்.

அருமையான பதிவு.

உங்களை போல் ஒரு சிலர் இப்படி போடுவதும், அதை பார்த்து என்னை மாதிரி ஒரு சிலர் இப்படி பின்னூட்டம் போடுவது மட்டுமே நடக்கிறது..தற்போது என்னால் முடிந்த வரை பின்பற்ற முயற்சித்து வருகிறேன்.

மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

said...

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது வெறும் முழக்கமாக மட்டுமே இருக்கிறது. பாரதி தாசன் சொல்வது போல் தமிழ் நாட்டில் கடைத்தெருவில் தமிழ் இல்லை. எம்மொழி வழி படித்தாலும் முதல் மொழி தாய் மொழியாக - தமிழ் நாட்டில் தமிழ் மொழி பயனுள்ள முறையில் அமைந்தால் தமிழ் நிச்சயம் நிலைக்கும். மம்மி டாடி என்று அழைக்கின்ற குழந்தை கூட அழகாகத் தமிழில் கவிதை எழுதுகிறது. அயல் மொழியில் அதிலும் அழகாக எழுதுகிறது. நம் பயன்பாட்டிலும் பழக்கத்திலும் கொண்டு வர அடிப்படைக் கல்வி தமிழில் தரப்பட வேண்டும். இதை எல்லாம் சொல்வதற்கு ஒரு தனி இடம் இருந்தால் செல்லும். ஏழை சொல் அம்பலம் ஏறுமா - சிந்திக்க வேண்டிய ஒன்று தான்.

said...

http://naanpudhuvandu.blogspot.com/2008/03/i-mean-comments-pls.html

http://naanpudhuvandu.blogspot.com/2008/04/ii.html

இவ்விரு சுட்டிகளையும் சுட்டி இப்பதிவுகளுக்குச் சென்று பாருங்கள் நண்பர்களே !!

said...

என் அத்தை மகன் ஒருவனும் நானும் பேசிக்கொள்கையில் சுத்தத தமிழிலேயே
பேசிக்கொள்வோம். ரொம்ப சுகமாயிருக்கும்.

said...

ஆம் நானானி - சுத்தத் தமிழிலேயே பேசுவது சுகந்தான்.

said...

//சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்று கருதப்படும் "தொல்காப்பியம்'தான் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல்களிலேயே முதல் நூல் என்று சொல்ல வேண்டும்.//

அகத்தியம் தான் முதல் நூல் என்று படித்ததாக நினைவு.. எது சரி?

said...

செல்விஷங்கர் said...
//எம்மொழி வழி படித்தாலும் முதல் மொழி தாய் மொழியாக..//

வழி மொழிகிறேன். இது நடைமுறைப் படுத்தப் பட்டாலே தமிழ் செழிக்கும். //தமிழனுக்கே...தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறதே// என்கிற ஆயில்யனின் ஆதங்கத்தும் விடிவாக அமையும்.

said...

சஞ்ஜெய்,

ஆம் - அகத்தியம் தான் முதல் நூல்.
அது கடல் கோளால் அழிந்தது என்பது வரலாறு. தொல்காப்பியத்தில் அகத்தியத்தின் மேற்கோள்கள் காட்டப்படுள்ளன என்பது மொழி வரலாறு. நன்றி

said...

ஆம் - பிறமொழிப் புலமையும் தாய்மொழி அறிவும் பெற்றால் மொழி சிறக்கும் என்பதற்கு எந்த வித சான்றும் தேவை இல்லை. தாய் மொழியை ஆழமாகவும் ஈடுபாட்டுடனும் கற்கப் பயிற்றுவிக்க வேண்டும். அப்போது மொழியறிவு இயல்பாய் விடும்.

நன்றி ராமலக்ஷ்மி

said...

நான் தமிழ் மணத்துக்குள் நுழைந்த நாள் முதலாக தங்கள் பதிவுகளுக்கு வந்து கொண்டு இருக்கிறேன். ஜாலியான உங்கள் பதிவுகளையே கண்டிருந்த நான் இத்தனை ஆழமாக சிந்திக்கும் உங்கள் இன்னொரு பக்கத்தையும் சுட்டி(யுடன்) காட்டி அனுப்பி வைத்த சீனா சாருக்கு நன்றி. [வாசிக்க வேண்டிய வலைகளுக்கு வழி காட்டும் வாழ்த்துக்குரிய வலைச் சரத்தின் ஆசிரியர் ஆயிற்றே!]