Wednesday, June 28, 2006

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - 3

7 - மாத்திரை

கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே

கண்ணிமைத்தலின் நேரமும், கை நொடித்தலின் அளவும் ஒரு மாத்திரை என்னும் அளவு. இதுவே தெளிவாக கற்றவரின் வழி.

நுண்ணிதின் = தெளிவின்
ஆறு = வழி

***********************************
நன்னூல்:


மூன்றுயிர் அளபிரண் டாநெடில் ஒன்றே
குறிலோ டையெளக் குறுக்கம் ஒற்றள(பு)
அரையொற் றிஉக் குறுக்கம் ஆய்தம்
கால்குறல் மஃகான் ஆய்தம் மாத்திரை.

அளபெடுத்து வரும்போது உயிறளபடைக்கு மூன்று மாத்திரை
குறில் ஒரு மாத்திரை
ஐகார மற்றும் ஔகாரக் குறுக்கம் ஒரு மாத்திரை
ஒற்றளபடைக்கு ஒரு மாத்திரை

ஒற்றுக்கும், இ மற்றும் உ குறுக்கம் ( குற்றியலிகரம், குற்றியலுகரம்) ஆய்தம் இவற்றிற்கு அரை மாத்திரை.

மகரக் குறுக்கத்திற்கும் ஆய்த குறுக்கத்திற்கும் கால் மாத்திரை என்று நன்னூல் கூறுகிறது
****************************

8 - உயிர் எழுத்துக்கள்

ஔ கார இறுவாய்ப்
பன் ஈர் எழுத்தும் உயிர் என மொழிப

அ முதல் ஔ வரையிலான பன்னிரண்டு ( பன் ஈர் ) எழுத்துகளும் உயிர் எழுத்துக்கள் என மொழியப்படும்.

மெய்யெழுத்துக்கள்
9 - ன கார இறுவாய்ப்
பதின் எண் எழுத்தும் மெய் என மொழிப

க் முதல் ன் வரையிலான பதினெட்டு எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் என மொழியப்படும்.

10 - மெய்யோடு இயையினும் உயிர் இயல் திரியா

மெய்யொடு சேர்ந்தாலும் உயிரெழுத்துகளின் தன்மை வேறு படாது

11 - மெய்யின் அளபே அரை என மொழிப

மெய்யெழுத்தின் அளபு அரை மாத்திரையாகும்

12 - அவ் வியல் நிலையும் ஏனை மூன்றே

ஏனைய மூன்றுக்கும் ( சார்பெழுத்துக்கள்) அளபு அரை மாத்திரையாகும்


தொடரலாம் ...

Friday, June 23, 2006

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - 02

01 - நூல் மரபு
________________________


முதல் எழுத்துக்கள்


01 . எழுத்து எனப் படுப
அகரம் முதல் னகரம் இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபில் மூன்று அலங்கடையே.

---------------

எழுத்து எனப்படுவது அ முதல் ன வரையிலான முப்பது என்பர். சார்பு எழுத்து மூன்று அல்லாத இடத்தில்

அலங்கடை = அல்லாத இடம்

அன்புமணியின் Cologne Online Tamil Lexicon: Search Results

அலங்கடை = in places other than, except in the case of


சார்பு எழுத்துக்கள்

2 - அவைதாம்
குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம்
ஆய்தம் என்ர
முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன


குறுகிய ஓசையுடைய இகரம், உகரம் மற்றும் மூன்று புள்ளியுடைய ஆய்தம் இவை எழுத்தை ஒத்து அமைவன.

அன்ன - such or similar things, impers. pl. are of th same kind, are similar, impers. pl. of finite appel; an appel. word of comparison

3 - குறில் எழுத்துக்கள்

அவைதாம்
அ இ உ எ ஓ என்னும்
அப்பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்று எழுத்து என்ப

அ இ உ எ ஓ என்னும் ஐந்து எழுத்துக்களும், ஓர் அளபில் ( . measurement; 2. lengthening of the sound of a letter ) அதாவது ஒரு மாத்திரையில் ஒலிப்பவைகள் குறில் எழுத்துக்கள் எனப்படும்.


4 - ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும்
அப்பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப



ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் ஏழு எழுத்துக்களும் இரண்டு மாத்திரையில் ஒலிப்பவைகள் நெடில் எழுத்துக்கள் எனப்படும்.

5 - மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே


மூன்று மாத்திரை ஆளவில் எந்த எழுத்தும் ஒலிக்காது


6 - நீட்டம் வேண்டின் அவ் அளபு உடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்


ஒலி அதிகம் தேவைப் பட்டால் அந்த மாத்திரையளவிற்கு தேவையான எழுத்து ஒலிகளை கூட்டி எழுப்புதல் என்று புலவர்கள் கூறுவர்,

.

******


தொடரலாம்

எழுத்ததிகாரம் - 01

வணக்கம்.

இந்த வலைப்பூ முழுவது தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டது. தவறு கண்ட நேரம் சுட்டிக் காட்ட தயங்காதீர்கள். தொல்காப்பியம் இலக்கண நூல். அகத்தியரின் சீடன் தொல்காப்பியர் என்றும் கூறுவர். இன்று அகத்தியர் எழுதிய அகத்தியம் கிடைப்பதில்லை. இதை இங்கே பதிப்பதன் நோக்கம் பிறருக்கு கற்றுத் தர அல்ல. இதைப் பதிக்கும் நோக்கிலாவது அதை படிக்க முடியுமே என்ற எண்ணம் தான். ஒருமுறை எழுதுதல் பல முறை படித்தல் என்ற வகையிலே இதை இங்குப் பதிக்க ஆரம்பித்துள்ளேன். மதுரை தமிழிலக்கிய மின்பதிப்பு திட்டத்திற்கு என் நன்றிகள் பல . வார்த்தைகளுக்கு பொருள் வேண்டி நான் உபயோகிக்கும் அகரமுதலி http://www.ee.vt.edu/~anbumani/tamildict/ . அன்புமணி அவர்களுக்கும் என் நன்றிகள் பல .

தொல்காப்பியம் :

தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் எனப்படுகின்றார். இது தவிர இவர் பற்றிய வேறு தகவல்களும் அதிகம் இல்லை எனலாம். மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும் இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கான அடிப்படை இதுவேயாகும்



இது தோன்றிய காலம் பற்றிய எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கணிப்பு எதுவும் இது வரை இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதமாக இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள். பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று [[தமிழ்ச் சங்கம்தமிழ்ச் சங்கங்க]]ளில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், [[இறையனார் களவியல் உரை]] என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்]], இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500 க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். எனினும் இது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும். ( நன்றி விக்கி பீடியா )

முதலில் எழுத்ததிகாரம் :

எழுத்தின் இலக்கணம் கூறப்படுவது. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் ஒலியெழுத்திலக்கணத்தைச் சார்ந்தது. சில இடங்களில் தொல்காப்பியர் வரிவடிவம் பற்றியும் கூறியிருக்கிறார். அதற்கு முன்னால் சிறப்பு பாயிரம் சொல்லப் படுகிறது.

சிறப்பு பாயிரம் என்பது ஒரு நூலின் முன்னுரை போன்றது.

சிறப்பு பாயிரம்
****************


வடவேங்கடம் தென்குமரி
ஆஇடைத்
தமிழ் கூறும் நல் லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆஇருமுதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கறுப்பனுவல்
நிலம் தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான் மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத்தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வ்ரைப்பின் ஐந்திரம் நிரைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே.

*****


மேலுள்ள இந்த பாயிரத்தை எழுதியவர் பனம்பாரனார் ஆவார்.

அதாவது வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் ஆன எல்லைக்குள் தமிழ் தந்து, தமிழர்கள் வழக்கையும், செய்யுள் வழக்கையும் நன்குணர்ந்து எழுத்து சொல் பொருள் என்ற மூவகைப் பொருளையும் தெளிவுறத் தெரிந்து

செந்தமிழ் இயற்கையாக வழங்கும் பகுதியில் இதற்கு முன்பு வந்த நூல்களை எல்லாம் முறையாகக் கற்று அதைத் தொகுத்து என்றும் நிலைபெறுகின்ற நூலாக அமைத்து நிலம் தரு திருவில் பாண்டிய மன்னன் அவையில் அறத்தை உணர்ந்த உணர்த்துகின்ற, நான்கு மறைகளை உணர்ந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் புலவர் கூடைய பேரவையில் மயக்கமின்றி தெளிவாகத் தான் உணர்ந்து பிறர்க்கு எழுத்து முறையைக் காட்டி கடல் சூழ் உலகத்து ஐந்திரம் எனும் நூலையும் உணர்ந்தறிந்து தன் பெயரை தொல் காப்பியன் என்ற வைத்துக் கொண்டு இந்நூலால் பல சிறப்புகள் பெற்ற தூமையானவர்

*************

தொடரலாம் ....