Wednesday, June 18, 2008

தொல்காப்பியம் 05 -- எழுத்ததிகாரம் - மயக்கம்



தொல்காப்பியம் -- எழுத்ததிகாரம் - மயக்கம்.

---------------------------------------------------------
22 : அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்
மெய்ம்மயக்கு உடனிலை தெரியுங் காலை.
அந்த மூவாறு பதினெட்டு மெய்யெழுத்துகளும் தாம் மொழியில் வருமிடத்து, தனி மெய்யெழுத்து, தன் முன்னர் நின்ற பிற மெய்யோடும், தம் மெய்யோடும் மயங்கும். உயிர்மெய் உயிர்மெய்யோடும் மயங்கும். இவ்வாறு மெய்ம்மயக்கம் இரு வகைப்படும்.

தனி மெய் பிற மெய்யுடன் மயங்கும் முறை.

23 : ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்க்
க ச ப என்னும் மூவெழுத்து உரிய.
ட ற ல ள என்று சொல்லப்படும் நான்கு மெய்ய்யெழுத்துகளின் முன்
க ச ப என்னும் மூன்று எழுத்துகளும் வந்து மயங்கும்.
எ.கா :
கட்க, கற்க, கற்ப, செல்க, செல்ப, கொள்ப

24 : அவற்றுள்
ல ள ஃகான் முன்னர் ய வ வும் தோன்றும்
லகர ளகர மெய்யெழுத்துகளின் முன்னர் யகர வகரங்கள் வந்து மயங்கும்.
எ.கா :
செல்வம், கள்வன், வெள்யாறு, கொல்யானை


25 : ங ஞ ண ந ம ன எனும் புள்ளிமுன்னர்
தத்தம் இசைகள் ஒத்தன நிலையே.
ங ஞ ண ந ம ன என்ற மெய்யெழுத்துகளின் முன் க ச ட த ப ற என்னும் இன மெய்யெழுத்துகள் மயங்கி நிற்றலுமுண்டு.
எ.கா :
கங்கன், கஞ்சன், கண்டன், கந்தன், கம்பன், மன்றம்

26 : அவற்றுள்
ண ன ஃகான் முன்னர்
க ச த ப ம ய வ ஏழும் உரிய.
ணகர னகரங்களின் முன் ட ற என்னும் எழுத்துகளே அல்லாமல்
க ச த ப ம ய வ என்னும் ஏழு எழுத்துகளும் வந்து மயங்கும்.
எ.கா :
புன்செய், அன்பு, வன்மை, பண்பு, வெண்மை

27 : ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய் பெற்று அன்றே.
ஞ ந ம வ என்னும் மெய்யெழுத்துகளின் முன்னால் யகரம் மயங்கி நிற்றலும் இயைந்து நிற்றலும் உண்டு.

28 : மஃகான் புள்ளிமுன் வவ்வும் தோன்றும்.
மகர மெய்யின் முன்னால் வகர மெய்யும் தோன்றும்.

29 : ய ர ழ என்னும் புள்ளி முன்னர்
முதலாகு எழுத்து ஙகரமொடு தோன்றும்.
ய ர ழ என்னும் மெய்யெழுத்துகளின் முன் மொழிக்கு முதலாகும் ஒன்பது மெய்யெழுத்துகளும் ஙகரத்தோடு தோன்றி மயங்கும்.

தனி மெய் தன் மெய்யோடு மயங்குமாறு .

30 : மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம்முன் தாம் வரும் ர ழ அலங்கடையே.
எல்லா மெய்யெழுத்துகளும் ர ழ அல்லாத இடத்து தம் முன் தாம் வந்து மயங்கும்.
எ.கா :
அம்மை, காக்கை, பச்சை, மஞ்ஞை, மண்ணை, கன்னி, தத்தை
-------------------------------------------------------------------------------------------------
பதிவர் குறிப்பு :
பொதுவாக இலக்கண நூற்பாக்களைப் படிக்கும் போது நடைமுறைச் சான்றுகள் காட்டப் பெறின் எளிதாக உணர்வோம். ஆனால், இது இலக்கணம் என்று தெரியாமலேயே நாம் வழங்கி வரும் மொழி நடையில் அவை அமைந்து விடுகின்றன. அதனால் இலக்கணத்திற்குக் காட்டப் பட்ட எடுத்துக் காட்டுகள் நமக்குப் புதுமையாய்த் தோன்றும். அவை பழக்கத்தில் வரும் போது இயல்பாய் விடும்.

செல்வி ஷங்கர்: 18..06.2008

30 :


8 comments:

said...

அருமை.

இன்னும் சில எடுத்துக்காட்டுகளைத் தரமுடியுமா? முடிந்தால் நடைமுறையில் இருப்பது ?

said...

உடனடியா பதிவுகளை ஆரம்பித்தமைக்கு நன்றி!!!

ஜீவா சொல்லியிருப்பது போல, நடைமுறையில் இருக்கும் உதாரணங்கள் எங்கள் புரிதலை இன்னும் எளிதாக்கும் என்றே தோன்றுகிறது.

said...

ஆஹா, பள்ளிக்கூடத்துக்கே போன மாதிரி இருக்கு. அந்த காலத்துல இந்த மாதிரில்லாம் சொல்லித் தந்ததில்லை. அழகா அருமையாஇருக்கு. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல உபயோகமா இருக்கும்.

said...

ஜீவ்ஸ், நடைமுறையில் உள்ள எடுத்துக் காட்டுகளைத் தர முயற்சிப்போம். அது தான் இவ்வுரையின் நோக்கமே !!

said...

மதுரையம்பதி - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

said...

சுமதி

நன்றி - அக்காலகட்டத்திலும் சொல்லித்தான் தந்தார்கள் - நம் மனதில் நிற்க வில்லை - அவ்வளவு தான்

said...

//செல்விஷங்கர் said...

சுமதி

நன்றி - அக்காலகட்டத்திலும் சொல்லித்தான் தந்தார்கள் - நம் மனதில் நிற்க வில்லை - அவ்வளவு தான்///

சரிதான்!
அந்த காலத்தில் பள்ளி படிப்புகளில் கற்று தந்தவை அப்பொழுது மனதில் நிற்கவில்லை இப்பொழுது மனது நினைக்கிறது!
மீண்டும் மாணவனான மகிழ்ச்சியுடன்

நன்றிகள்!

said...

ஆயில்யன்

படித்தவை எல்லாம் நம்மை அறியாமலெயே சில நேரத்தில் நினைவிற்கு வந்து விடும். சிலவற்றை மனம் மறுத்துவிடும். அவ்வளவுதான்