Thursday, June 26, 2008

தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்: 2 : மொழி மரபு: 1: சார்பெழுத்துகள்

01 : குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே

ஒரு மொழிக் குற்றியலிகரம் மியா என்னும் அசைச்சொல்லில் யாகாரத்திற்கு முன் மகர மெய்யின் மீது ஊர்ந்து வரும்.

(எ.கா) : கேண்மியா, சென்மியா ( கேளுங்கள், செல்லுங்கள் என்பது பொருள்)

02 : புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணரக்கூறின் முன்னர்த் தோன்றும்.

சொற்புணர்ச்சியின் இடையே குற்றியலுகரம் யகரத்தின் முன்னே இகரமாய்த் திரிந்து குறுகி ஒலித்தலுமுண்டு.

(எ.கா ) : நாடியாது, குரங்கியாது ( நாடு + யாது -
ட் + உ = டு
ட் + இ = டி
நாடியாது)

03 : நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே

குற்றியலுகரம் வல்லின மெய்கள் ஆறின் மீதும் ஊர்ந்து நெட்டெழுத்தின் பின்னும் ஐவகைத் தொடர்மொழியின்
ஈற்றிலும் நிற்றல் வேண்டும்.

(எ.கா) :
நாடு : நெடில் தொடர்
அழகு : உயிர்த் தொடர்
பாட்டு : வன்தொடர்
பஞ்சு : மென்தொடர்
மார்பு : இடைத் தொடர்
எஃகு : ஆய்தத் தொடர்

தொடரும் ...... செல்வி ஷங்கர் - 26082008

4 comments:

Anonymous said...

நல்ல சேவை.

எனக்கு ஒரு வேண்டுகோள் உங்க கிட்ட. இங்க படிக்கும் போது அப்படியே தமிழ் பாட இலக்கணப் புத்தகத்தில படிக்கற மாதிரியே ( கடின உரைநடை வீச்சு ) இருக்கு.

இன்னும் எளிமைப் படுத்தி எழுத முடியுமா ?

உதாரணத்துக்கு
//
ஒரு மொழிக் குற்றியலிகரம் மியா என்னும் அசைச்சொல்லில் யாகாரத்திற்கு முன் மகர மெய்யின் மீது ஊர்ந்து வரும்.//

இது மற்றும் அடுத்து வந்த எதுவும் விளக்கமாக புரியவில்லை.

இது நடைமுறையில் உபயோகிக்க சாத்தியமானதா என்றும் சொல்லுங்க


உங்களின் சேவைக்கு நன்றி பல

said...

//கேண்மியா, சென்மியா//

இந்த சொற்கள் அதிகம் நம்மால் உபயோகிக்க முடியாமலேதானே இருக்கிறது? (நான் கேள்விப்படும் முதல் வார்த்தையும் கூட!)

அல்லது கேட்பியா சொல்லுவியான்னு தானே பேசுறோம்!

said...

ராமன்,

பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும் வேறுபடுவதுண்டு - விதிகள் மிகவும் எளிமையாக்கப்பட்டால் வேறு ஒரு பொருளைத் தந்து விடும். இந்த மியா என்ற அசைச்சொல் தற்பொழுது நம்மிடம் பழக்கத்தில் இல்லை. முன்பும் இது அதிகமாக செய்யுளில் தான் பயின்று வந்திருக்கிறது. சங்க கால பேச்சு வழக்கில் இடம் பெற்றிருக்கிறது

இருப்பினும் எளிமைப்படுத்த முயல்வோம்

said...

ஆயில்யன்

கேட்பியா செல்வியா என்பது பேச்சு வழக்குச் சொற்கள் - இலக்கணம் தோன்றிய காலத்திலிருந்து காட்டப்பட்டிருக்கின்ற ஒரே சான்று கேண்மியா மற்றும் சென்மியா தான். இலக்கியத்தில் இவை பொருள் பொதிந்த சொற்களூம் கூட. அக்கால அரசர்களும் புலவர்களும் இம்மாதிரித்தான் உரையாடி இருக்கிறார்கள் என்பது இலக்கியத்தைப் பர்ர்க்கும் போது தெரிகிறது.