Friday, June 23, 2006

எழுத்ததிகாரம் - 01

வணக்கம்.

இந்த வலைப்பூ முழுவது தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டது. தவறு கண்ட நேரம் சுட்டிக் காட்ட தயங்காதீர்கள். தொல்காப்பியம் இலக்கண நூல். அகத்தியரின் சீடன் தொல்காப்பியர் என்றும் கூறுவர். இன்று அகத்தியர் எழுதிய அகத்தியம் கிடைப்பதில்லை. இதை இங்கே பதிப்பதன் நோக்கம் பிறருக்கு கற்றுத் தர அல்ல. இதைப் பதிக்கும் நோக்கிலாவது அதை படிக்க முடியுமே என்ற எண்ணம் தான். ஒருமுறை எழுதுதல் பல முறை படித்தல் என்ற வகையிலே இதை இங்குப் பதிக்க ஆரம்பித்துள்ளேன். மதுரை தமிழிலக்கிய மின்பதிப்பு திட்டத்திற்கு என் நன்றிகள் பல . வார்த்தைகளுக்கு பொருள் வேண்டி நான் உபயோகிக்கும் அகரமுதலி http://www.ee.vt.edu/~anbumani/tamildict/ . அன்புமணி அவர்களுக்கும் என் நன்றிகள் பல .

தொல்காப்பியம் :

தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் எனப்படுகின்றார். இது தவிர இவர் பற்றிய வேறு தகவல்களும் அதிகம் இல்லை எனலாம். மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும் இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கான அடிப்படை இதுவேயாகும்



இது தோன்றிய காலம் பற்றிய எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கணிப்பு எதுவும் இது வரை இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதமாக இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள். பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று [[தமிழ்ச் சங்கம்தமிழ்ச் சங்கங்க]]ளில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், [[இறையனார் களவியல் உரை]] என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்]], இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500 க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். எனினும் இது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும். ( நன்றி விக்கி பீடியா )

முதலில் எழுத்ததிகாரம் :

எழுத்தின் இலக்கணம் கூறப்படுவது. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் ஒலியெழுத்திலக்கணத்தைச் சார்ந்தது. சில இடங்களில் தொல்காப்பியர் வரிவடிவம் பற்றியும் கூறியிருக்கிறார். அதற்கு முன்னால் சிறப்பு பாயிரம் சொல்லப் படுகிறது.

சிறப்பு பாயிரம் என்பது ஒரு நூலின் முன்னுரை போன்றது.

சிறப்பு பாயிரம்
****************


வடவேங்கடம் தென்குமரி
ஆஇடைத்
தமிழ் கூறும் நல் லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆஇருமுதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கறுப்பனுவல்
நிலம் தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான் மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத்தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வ்ரைப்பின் ஐந்திரம் நிரைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே.

*****


மேலுள்ள இந்த பாயிரத்தை எழுதியவர் பனம்பாரனார் ஆவார்.

அதாவது வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் ஆன எல்லைக்குள் தமிழ் தந்து, தமிழர்கள் வழக்கையும், செய்யுள் வழக்கையும் நன்குணர்ந்து எழுத்து சொல் பொருள் என்ற மூவகைப் பொருளையும் தெளிவுறத் தெரிந்து

செந்தமிழ் இயற்கையாக வழங்கும் பகுதியில் இதற்கு முன்பு வந்த நூல்களை எல்லாம் முறையாகக் கற்று அதைத் தொகுத்து என்றும் நிலைபெறுகின்ற நூலாக அமைத்து நிலம் தரு திருவில் பாண்டிய மன்னன் அவையில் அறத்தை உணர்ந்த உணர்த்துகின்ற, நான்கு மறைகளை உணர்ந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் புலவர் கூடைய பேரவையில் மயக்கமின்றி தெளிவாகத் தான் உணர்ந்து பிறர்க்கு எழுத்து முறையைக் காட்டி கடல் சூழ் உலகத்து ஐந்திரம் எனும் நூலையும் உணர்ந்தறிந்து தன் பெயரை தொல் காப்பியன் என்ற வைத்துக் கொண்டு இந்நூலால் பல சிறப்புகள் பெற்ற தூமையானவர்

*************

தொடரலாம் ....

12 comments:

said...

தொல்காப்பியத்தை இங்கே விளக்கத்தோடு எழுதுதற்கு மிக்க நன்றி ஐயப்பன் கிருஷ்ணன்.

said...

வருகைக்கும் ஊக்கத்திற்கும் ந்னறி babble & குமரன். இயன்ற வரை எழுதுகிறேன்..

சர்வம் கிருஷ்ணார்ப்பனம்

அன்புடன்
ஐயப்பன்

said...

வணக்கம் அய்யப்பன் கிருஷ்ணன்,

நல்லதொரு முயற்சி வாழ்த்துகள். சிலர் தொல்காப்பியத்துக்கு பூங்கா அமைத்து 500 ரூபாய் கட்டணம் வாங்குவதால் என்ன பயன் உங்களை போன்றோர் எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் செய்வதே சிறந்தது! அந்த அகரமுதலி தொடுப்பும் பயன் உள்ளது நன்றி!

said...

babble : நீங்கள் சொன்னது போல் முன்னுரை தந்து விட்டேன். உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி

***

வவ்வால் அவர்களுக்கு.. தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. தொல்காப்பிய பூங்கா வாங்கலாம் என்று முனைந்து அதன் விலையைப் பார்த்ததும் பகீர் என்றது :)

அன்புடன்
ஐயப்பன்

said...

ஐயப்பன்,

இந்த முயற்சி மிகவும் நல்லதொரு முயற்சி. பாடலைப் படித்தால் எளிதாகப் புரியவில்லை. ஆனால் விளக்கம் புரிகிறது. தற்பொழுது வழக்கில் இல்லாத வார்த்தைகளுக்கு பொருள் தந்தால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

நல்ல முயற்சி. தொடருங்கள்.

said...

தங்களது முயற்சி சீறிய முறையில் வெற்றிபெற வாழ்த்துக்கள். தமிழர்களின் மூல நூலாக, முதல் நூலாக (அகத்தியம் கிடைக்கவில்லை என்பதால்..) தொல்காப்பியம் இன்றைக்கும் திகழ்ந்து வருகிறது.

said...

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். தொடருங்கள்.

said...

தேவையான ஒரு பதிவு.
எல்லா வகையிலும் பயனுற வாழ்த்துகள்!

said...

இலவசக்கொத்தனார் said...
ஐயப்பன்,

இந்த முயற்சி மிகவும் நல்லதொரு முயற்சி. பாடலைப் படித்தால் எளிதாகப் புரியவில்லை. ஆனால் விளக்கம் புரிகிறது. தற்பொழுது வழக்கில் இல்லாத வார்த்தைகளுக்கு பொருள் தந்தால் நன்றாக இருக்கும்.

*********


நன்றி கொத்தனார். இயன்றவிடத்தில் தருகிறேன்.

அன்புடன்
ஐயப்பன்

said...

பெருவிஜயன், கனக்ஸ் மற்றும் எஸ்.கே ஊக்கத்திற்கு நன்றி



அனைவரின் ஆதரவுடன் தொடர்கிறேன்

அன்புடன்
ஐயப்பன்

said...

மிகச் சிறந்த முயற்சி. என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

தொடர்ந்து எழுதுங்கள்.