Wednesday, June 28, 2006

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - 3

7 - மாத்திரை

கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே

கண்ணிமைத்தலின் நேரமும், கை நொடித்தலின் அளவும் ஒரு மாத்திரை என்னும் அளவு. இதுவே தெளிவாக கற்றவரின் வழி.

நுண்ணிதின் = தெளிவின்
ஆறு = வழி

***********************************
நன்னூல்:


மூன்றுயிர் அளபிரண் டாநெடில் ஒன்றே
குறிலோ டையெளக் குறுக்கம் ஒற்றள(பு)
அரையொற் றிஉக் குறுக்கம் ஆய்தம்
கால்குறல் மஃகான் ஆய்தம் மாத்திரை.

அளபெடுத்து வரும்போது உயிறளபடைக்கு மூன்று மாத்திரை
குறில் ஒரு மாத்திரை
ஐகார மற்றும் ஔகாரக் குறுக்கம் ஒரு மாத்திரை
ஒற்றளபடைக்கு ஒரு மாத்திரை

ஒற்றுக்கும், இ மற்றும் உ குறுக்கம் ( குற்றியலிகரம், குற்றியலுகரம்) ஆய்தம் இவற்றிற்கு அரை மாத்திரை.

மகரக் குறுக்கத்திற்கும் ஆய்த குறுக்கத்திற்கும் கால் மாத்திரை என்று நன்னூல் கூறுகிறது
****************************

8 - உயிர் எழுத்துக்கள்

ஔ கார இறுவாய்ப்
பன் ஈர் எழுத்தும் உயிர் என மொழிப

அ முதல் ஔ வரையிலான பன்னிரண்டு ( பன் ஈர் ) எழுத்துகளும் உயிர் எழுத்துக்கள் என மொழியப்படும்.

மெய்யெழுத்துக்கள்
9 - ன கார இறுவாய்ப்
பதின் எண் எழுத்தும் மெய் என மொழிப

க் முதல் ன் வரையிலான பதினெட்டு எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் என மொழியப்படும்.

10 - மெய்யோடு இயையினும் உயிர் இயல் திரியா

மெய்யொடு சேர்ந்தாலும் உயிரெழுத்துகளின் தன்மை வேறு படாது

11 - மெய்யின் அளபே அரை என மொழிப

மெய்யெழுத்தின் அளபு அரை மாத்திரையாகும்

12 - அவ் வியல் நிலையும் ஏனை மூன்றே

ஏனைய மூன்றுக்கும் ( சார்பெழுத்துக்கள்) அளபு அரை மாத்திரையாகும்


தொடரலாம் ...

5 comments:

said...

தொல்காப்பியத்தை தொடராக வெளியிடுவது -- நல்ல முயற்சி ஐயப்பன். வாழ்த்துக்கள். (என்னை ஞாபகமிருக்குதுங்களா? :-))

said...

மிக மிக விளக்கமாகச் சொல்கிறீர்கள் ஐயப்பன். மிக்க நன்றி.

உயிரளபடையைப் பார்த்திருக்கிறேன். மற்றவற்றிற்கு - ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், ஒற்றளபடை, மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் - இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் கிடைக்குமா?

குற்றியலிகரத்திற்கும் குற்றியலுகரத்திற்கும் கூட எடுத்துக் காட்டுகள் தந்தால் நன்று. அவற்றைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் பார்த்தால் புரிந்துகொள்வேன்.

said...

நன்றி சேதுக்கரசி :)

நீங்கள் அனுப்புவதாகச் சொன்ன ரெசிபி இன்னும் வரலை ;) மறக்க முடியுமா என்ன

அன்புடன்
ஐயப்பன்

said...

குமரன்.

கண்டிப்பாக எடுத்துக்காட்டுடன் எழுத முயற்சிக்கிறேன். அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

ஊக்குவித்தலுக்கு நன்றி

அன்புடன்
ஐயப்பன்

said...

//
நீங்கள் அனுப்புவதாகச் சொன்ன ரெசிபி இன்னும் வரலை ;)//

அச்சச்சோ உங்க ஞாபக சக்தியை question பண்ணினதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.. எனக்குத்தான் என்ன ரெசிபின்னு மறந்துபோச்சு! :-)